இறைவன் எங்கும் வியாபித்திருக்கும் பொழுது ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா?
இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றார் என்பதிலே எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. சூரியனுடைய ஒளிக்கதிர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருந்தாலும் வெய்யிலிலே ஒரு கடதாசியையோ அல்லது பஞ்சினையோ வைத்தால் அது நன்றாகக் காயுமேயன்றி தீப்பற்றமாட்டாது. ஆனால் அதே வெய்யிலிலே ஒரு சூரியகாந்தக் கண்ணாடியின் கீழ் வைக்கப்படும் கடதாசியோ அல்லது பஞ்சோ தீப்பற்றி எரியும். அதாவது எங்கும் பரந்துள்ள சூரிய ஒளிக்கதிர்களை சூரியகாந்தக் கண்ணாடியானது சேர்த்து ஒன்றாக்கி அனுப்புவது போல எல்லா இடங்களிலும் நிறைந்துள்ள..,
இறையருளானது மந்திர யந்திர சக்திகளினாலே சேர்த்து ஒன்றாக திரட்டி ஆலயங்களிலே வைக்கப்பட்டுள்ளதென்றும்எனவே ஆலயங்களிலே சென்றுவணங்கும் பொழுது நாம் செய்த ஊழ்வினைகள் யாவும் வெதும்பி அவற்றின் வேகம் குறைந்து போய்விடுமென்றும் வாரியார் சுவாமிகள் குறிப்பிடுகின்றார்.
பஞ்சபூதங்களுமே இறைவன் தான் என்று கூறுவதன் பொருள் யாது?
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றிநீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றிதீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றிவளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றிவெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றிஇதன் பொருள்:-நிலம் ----- (சப்தம்,பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் 5 குணங்கள் கொண்டது) நீர் ----- (சப்தம், பரிசம், ரூபம், ரசம் என்னும் 4 குணங்கள் கொண்டது)தீ ----- (சப்தம்இ பரிசம், ரூபம் என்னும் 3 குணங்கள் கொண்டது)காற்று ----- (சப்தம், பரிசம் என்னும் 2 குணங்கள் கொண்டது)ஆகாயம் ----- (சப்தம் என்னும் ஒரே குணம் கொண்டது)
கடவுள் எங்கும் நிறைந்தவர், எல்லாம் வல்லவர், எல்லாம் அறிபவர் என்பதால் அவர் எங்குமே வியாபித்திருக்கும் பொழுது உருவ வழிபாடு எதற்காக?
இறைவன் உருவம் இல்லாதவராயினும் நாம் அவரை நினைப்பதற்காகவும் வணங்குவதற்காகவும் உருவவடிவங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது. யோகிகள், ஞானிகளல்லாத சாதாரண மனிதர்கள் மத்தியிலே அவர்கள் மனங்களில் இறைவனை நிறுத்துவதற்கு உருவவழிபாடு இன்றியமையாததாகும். இப்படியான உருவங்கள் இறைவனின் தன்மைகளைக் குறிப்பவையாக அமைவதால் ஆரம்பத்தில் இறைவனைப்பற்றி அறிந்து கொள்ள உருவவழிபாடு முக்கியமானதாகின்றது.
"இறைவன் ஒருவனே" என்று சொல்லப்படும் பொழுது வெவ்வேறு உருவங்களில் சொல்லப்படுவது எவ்வாறு?
ஆம். இறைவன் ஒருவரே தான். அவர் வடிவம் முதலியவற்றிற்கு அப்பாற்பட்ட வராயினும், சத்தியினாலே பல்வேறு தொழில்களைச் செய்வதால் அவர் செய்யும் திருத்தொழில்களைப் பொறுத்து வெவ்வேறு பெயர் கொண்டு வெவ்வேறு உருவங்களில் வழிபடுகின்றோம். இதனை வாரியார் சுவாமிகள் மிக அழகாக தங்கம் ஒன்று தானென்றாலும் அது வெவ்வேறு வடிவங்களில் அணிகலன்களாகச் செய்யப்படும் பொழுது வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றதென்று கூறி விளங்கவைப்பார். கோவிலினுள்ளே எத்தனை பரிவார மூர்த்திகள் இருந்தாலும் பரம்பொருள் ஒன்றே என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆலய நுளைவாயில்களிலேயே துவார பாலகர்கள் தங்களது சுட்டு விரல்களைக் காட்டி (ஒன்று என்ற பாவனையாக) நிற்கின்றார்கள்.
அவ்வாறாயின் சிவலிங்கம் எந்த உருவமாகவும் (கை,கால் போன்ற உறுப்புகள் கொண்டில்லாமையினால்) புரிந்து கொள்ள முடியவில்லையே?
சிவலிங்கம் என்பது அருவுருவத் திருமேனியென்று சொல்லப்படுகின்றது. அதாவது கால் கைகளுடன் கூடிய உருவமாகவும் இல்லாமல் உருவமே இலையென்று சொல்லுகின்றவாறும் இல்லாமல் இரண்டுமே கலந்து அருவுருவத் திருமேனியாகக் காட்சியளிக்கின்றது. லிங்கம் என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு தமிழில் அடையாளம் என்று பொருள்படும். எனவே சிவனை அடையாளப்படுத்துவதால் சிவலிங்கம் என்று கொள்ளப்படுகின்றது. சிற்ப சாத்திர முறைப்படி சிவலிங்கம் மூன்று பகுதிகளைக் கொண்டதென்றும் அதாவது:-அடிப்பாகம் ----- பிரம்ம பாகம் ---- பிரம்ம லிங்கம் ----ஆத்ம சோதிநடுப்பாகம் ----- விஷ்ணு பாகம் ----- விஷ்ணு லிங்கம் -----அருட்சோதிமேல்பாகம் ---- சிவன் பாகம் ----- சிவலிங்கம் ----- சிவசோதி என்றும் சொல்லப்படுகின்றது. எனவே சிவலிங்கத்தை வணங்கினால் மும்மூர்த்திகளையும் வணங்கிய அருள் கிடைக்கும்.
உருவமாக அமைக்கப்பட்டிருக்கின்ற இறைவனை விக்கிரகம் என்று கூறுவதேன்?
விக்கிரகம் = வி + கிரகம் (வி = மேலான, கிரகம் = உறைவிடம்) அதாவது மேலான உறைவிடம் என்னும் பொழுது இறைவன் சிறப்பாக உறையுமிடமென்று பொருள்படும்.
இவ்வாறு அமைகின்ற விக்கிரகங்கள் கல்லிலே செதுக்கப் பட்டவையாகவும் வேறு சில தாம்பர விக்கிரகமாகவும் அமையக் காரணமென்ன?
அதாவது இறைவன் ஒளி மயமானவன். கல்லை ஒன்றுடனொன்று உரசும்பொழுது ஒளி (நெருப்பு) உண்டாவதைக் காணலாம். எனவே தான் அப்படிப்பட்ட கல்லிலே இறைவனது திருவுருவங்கள் செதுக்கப்பட்டு கும்பாபிசேகத்தின் பொழுது கோவில்களிலே பிரதிட்டை செய்யப்படுகிறது. "சொல்லுக் கடங்கான்காண் சொல்லறிந்து நின்றவன்காண் கல்லுள் ளிருந்த கனலொளிபோ னின்றவன்காண்". என்று பட்டினத்தார்" கூறுகின்றார்.அடுத்து உற்சவ மூர்த்திகள் தாம்பர(தாமிர) விக்கிரகங்களாக அமைவதன் காரணமென்னவென்றால், உலோகம் மின்சாரத்தைக் கடத்த வல்லது. எனவே மூலத்தானத்திலிருக்கும் அருள் மின்சாரத்தை வீதியிலே செலுத்தவல்லது தாம்பர மூர்த்திதா னென்று வாரியார் சுவாமிகள் குறிப்பிடுகின்றார்.
சிற்பியினாலே கல்லிலே வடிக்கப்படும் பொழுதோ அல்லது கோவிலில் பிரதிட்டை செய்யப்பட முன்னரோ ஆச்சாரமற்ற இடங்களில் இந்த விக்கிரகங்களை வைப்பது தவறா?
கும்பாபிசேகம் நடைபெறும் வரையில் இவ்விக்கிரகங்கள் சாதாரண கல்லாகக் கணிக்கப்படுவதால் தான் அவ்வாறு வைக்கப்படுகின்றது. கும்பாபிசேகத்தையொட்டி இந்த விக்கிரகங்களை சலாதிவாசம் (தண்ணீரில் வைப்பது) தான்யாதிவாசம் (தானியத்தினுள் வைப்பது) செய்து மந்திரங்களாலே யந்திரங்களை எழுதி விக்கிரகத்தின் அடியிலே வைத்து யாகங்கள் செய்து சோதியை வளர்த்து அந்த சோதியைக் கும்பத்துக்குக் கொண்டுபோய் பின்னர் கும்பத்திலேயிருந்து பிம்பத்துக்குக் கொண்டு போவதாகிய கும்பாபிசேக நிகழ்வின் பின்னர் தான் இவ்விக்கிரகங்கள் தெய்வசக்தி பெற்றுவிடுவதால் இறைவன் வாழுமிடமாகக் கருதப்படுகின்றது.
புதிதாகக் கட்டப்பட்ட கோவிலுக்கு செய்யப்படுகின்ற கும்பாபிசேகத்தைவிட வேறெந்தச் சந்தர்ப்பங்களிலே கோவில்களில் கும்பாபிசேகம் இடம்பெறுகின்றது?
புதியதாகக் கட்டப்பட்ட கோவிலுக்குச் செய்யப்பட்ட கும்பாபிசேகத்தின் பொழுது சாத்தப்பட்ட அட்டபந்தனமானது (மருந்து சாத்துதல்) ஆகக்கூடியது பன்னிரணடு வருடங்கள் வரைதான் பழுதடையாமல் இருக்கும். இவ்வாறு சாத்தப்படுகின்ற அட்ட பந்தனம் பழுதடையும் பொழுது வாலத்தாபனம் செய்யப்பட்டு கும்பாபிசேகம் செய்ய ப்படும். சில சந்தா;ப்பங்களில் அட்டபந்தனக் கலவை பிழையான அளவுகளில் கலக் கப்பட்டாலோ அல்லது நன்கு இடிக்கப்படாவிட்டாலோ பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னரே பழுதடைய ஆரம்பித்துவிடும். இப்படியான சந்தர்ப்பங்களிலேயும் கும்பா பிசேகம் செய்யப்படும். அதைவிட கோவில் களிலே ஏதாவது பாரிய திருத்த வேலைகள் இடம்பெற்றாலும் கும்பாபிசேகம் செய்வது வழக்கம்.
அட்டபந்தனம் என்பது என்ன?
அட்டபந்தனம் என்பது ஆசனமும் மூர்த்தியும் நன்றாக ஒன்றி இணையும்படியாகச் சாத்தப்படும் ஒரு சேர்வையாகும்.
கொம்பரக்கு ----- 1 பங்கு
குங்குலியம் ----- 3 பங்கு
வெண்மெழுகு ----- 3 பங்கு
காவிக்கல் ----- 3 பங்கு
வெண்ணெய் ----- 3 பங்கு
செம்பஞ்சு ----- 3 பங்கு
சுக்கான் -----முக்காற் பங்கு
சாதிலிங்கம் ----- காற்பங்கு
போன்ற எட்டு விதமான பொருட்களாகும்.